சம்பள மாற்றியமைப்பு

சம்பளம் (Salary)

எம்மால் ஆற்றப்படும் சேவை ஒன்றிற்காக வழங்கப்படுகின்ற ஊதியம் சம்பளம் என வரைவிலக்கணப்படுத்தப்படும்.

சம்பளம் பெறப்படுகின்றபோது அத்தொகையானது சரியாககாணப்படுகின்றதா என்பதனை பரிசீலனை செய்து கொள்வது எம் அனைவரதும் கடமையாகும். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மேலதிக மீள் அறவீடுகளை தவிர்த்துக்கொள்வதுடன் உரியவேளையில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கும் இது உறுதுணையாக அமைகின்றது.

சம்பளமாற்றியமைப்பு(Salary Conversion)

பின்வரும் மூன்று சந்தர்ப்பங்களின் போது சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
1. காலத்திற்குக்காலம் வெளியிடப்படும் சம்பளமாற்றம் 
    தொடர்பான சுற்றுநிருபங்கள் வலுப்பெறும் போது
2. பதவியுயர்வின் போது
3. பதவி இறக்கத்தின்போது

சம்பள அளவுத்திட்டம் ஒன்றின் மீளாய்வின் போது செலுத்தப்படும் சம்பளம்

பொதுவாக படிநிலைக்குப் படிநிலையான சம்பளமாற்றியமைப்பின் போது பழைய சம்பள அளவுத்திட்டத்தில் இறுதியாகப் பெற்ற சம்பளத்தின் நேரொத்தபடிநிலை புதியசம்பள அளவுத்திட்டத்தில் கண்டறியப்பட்டு சம்பளம் மீளாய்வு செய்யப்படும்.
ஆனால் E code VII 4 படி சம்பள மீளாய்வினை மேற்கொள்ளும் போது பின்வரும் மூன்று நடைமுறைகளின் படி சம்பளபடிநிலை கணக்கிடப்படும்.

இறுதியாகப் பெற்று வந்த சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் சம்பளப் படிநிலைகளுக்கிடையே வரும் போது, அவரை புதிய சம்பள அளவுத்திட்டத்தின் அதற்கடுத்துள்ள சம்பளப் படிநிலையில் வைத்தல் வேண்டும்(4.3)

இறுதியாகப் பெற்று வந்த சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் சமனான படிநிலையில் வரும் போது, அவரை புதிய சம்பள அளவுத்திட்டத்தின் அதற்கடுத்துள்ள சம்பளப் படிநிலையில் வைத்தல் வேண்டும் (பொ.நி.சு-365 ற்கமைவாக)(4.4)

இறுதியாகப் பெற்றுவந்த சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பள படிநிலையிலும் குறைவாக வரும்போது, அவரை ஆரம்ப சம்பள அளவுத்திட்டத்தில் வைத்தல் வேண்டும்(4.5)

பதவியுயர்வின் போது செலுத்தப்படும் சம்பளம்

பதவி உயர்வு பெறும் போது சம்பளமாற்றியமைப்பு சம்பந்தமாக அறிவுரைகளைப் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் கால ஒழுங்கில் பின்பற்றப்படுதல் வேண்டும்.

1987.12.31 வரை- E code VII 5
1988.01.01 – 31.12.1999 வரை–பொதுநிர்வாகசுற்றறிக்கை 11/94 இன்   
    பிரகாரம் 1988.01.01 – 1992.12.31 வரை நிலுவைகள் எதுவும்
    வழங்கப்படமாட்டாது.
2000.01.01 - இன்றுவரை - பொதுநிர்வாக சுற்றறிக்கை 07/2000 இன்
    பிரகாரம்

பதவி உயர்வின் போது E code VII 5 இன் பிரகாரமே சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போது பின்வரும் 4 முறைகளில் சம்பளமாற்றியமைத்தல் மேற்கொள்ளப்படமுடியும்.

பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பத்தில் குறித்த உத்தியோகத்தர் இறுதியாகப் பெற்ற சம்பளமானது புதிய பதவியின் சம்பளபடிநிலைகளுக்கு இடையில் அமையுமாயின் அவர் கூடிய சம்பளபடிமுறையில் வைக்கப்படுவதுடன் அவருக்கு மேலதிக சம்பள ஏற்றம் ஒன்றும் வழங்கப்படும்.(5.4)

பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பத்தில் குறித்த உத்தியோகத்தர் இறுதியாகப் பெற்ற சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளத்திற்கு அல்லது சம்பள படிமுறைகளுக்கு நேர் ஒத்ததாக அமையும் பட்சத்தில் அவர் அடுத்த உயர் சம்பளபடிமுறையில் வைக்கப்படுவார்.(5.5)

பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பத்தில் குறித்த உத்தியோகத்தர் இறுதியாகப் பெற்ற சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளத்திற்கு ஒரு சம்பள ஏற்றத்தின் அளவால் அல்லது அதனிலும் கூடுதலான அளவால் குறையுமிடத்து உத்தியோகத்தர் புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளத்தில் வைக்கப்படுவார்.(5.6)

பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பத்தில் குறித்த உத்தியோகத்தர் இறுதியாகப் பெற்ற சம்பளமானது புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளத்தைவிடவும் குறைவதும் ஒரு சம்பள ஏற்றத்திலும் பார்க்க குறைந்த அளவில் குறையுமிடத்து அவருக்கு புதிய சம்பள அளவுத்திட்டத்தில் மேலதிக சம்பள ஏற்றம் ஒன்று வழங்கப்படும்.(5.7)